தனது நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த கலைஞன் போண்டாமணி உடல் நலக் குறைவால் காலமானார். அவர் குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
பவுனு பவுனு தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் போண்டா மணி. விவேக், வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, மருதமலை படத்தில் வடிவேலுவுடன் இணைந்து இவர் நடித்த காட்சி இன்றளவும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.
கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் போண்டாமணியை போலீசார் துரத்திக் கொண்டு வரும் பொழுது, அந்த நேரத்தில் வடிவேலுவை மாட்டிவிடும் விதமாக போலீஸ் அடிச்சு கூட கேட்பாங்க எதையும் சொல்லிவிடாதே என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவார். இதனால் போலீசார் வடிவேலுவை பார்த்து அவர் என்ன சொன்னார் என்று கேட்ட பொழுது வடிவேல் திரும்பத் திரும்ப இதை சொல்லி அடி வாங்கும் காட்சிகள் ரசிகர்களை இன்றளவும் சிரிக்க வைக்க கூடியதாக இருக்கும்.
ஒரு பேருந்தை வைத்து முழுமையான காமெடி படமாக சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தை இயக்குநர் அசோகன் எடுத்திருப்பார். அந்த படத்தில் காமெடி நடிகர் போண்டாமணி ஒரு மாப்பிள்ளை வேஷத்தில் இருக்கும் பொழுது அவரை அழைத்து செல்வதற்காக முரளி மற்றும் வடிவேலு போயிருப்பார்கள். அப்பொழுது இவரை ரெடி பண்ணுவதற்காக முரளி மற்றும் வடிவேலு சேர்ந்து செய்யும் அலப்பறை ரொம்பவே ரசிக்கும் படியாக இருக்கும்.
இங்லீஸ்காரன் திரைப்படத்தில் வடிவேலுவின் கூட்டாளியாக போண்டாமணி நடித்திருப்பார். அந்த படத்தில் நமீதாவின் திருமணத்தை நிறுத்துவதற்காக, மாப்பிள்ளை சீப்பை எடுத்து வந்து பாஸ் இதை ஒளிச்சி வைச்சா கல்யாணம் நடக்காது என்கிற அவருடைய காமெடி இன்றளவும் மீம்ஸ் உலகில் பிரபலமாகிறது. காமெடிக்காகவே எடுக்கப்பட்ட படம் வின்னர். அதில் வடிவேலுவின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் குழுவில் மொட்டை தலை, கட்டை குரலுடன் இவர் நடித்த காட்சிகள் அனைவரையும் சிரிக்கை வைக்கும்.
திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த போண்டா மணிக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், சில சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போண்டா மணிக்கு இரு சிறுநீரகங்களும் செயல் இழந்தன. பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருந்த போண்டாமணி சிகிச்சைக்காக பலரிடம் உதவி கோரியிருந்தார்.
தனித்துவமான உடல்மொழியாலும், அப்பாவித்தனமான நடிப்பாலும் பலரையும் கவர்ந்த காமெடி நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் இறப்பு திரையுலகினர் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. போண்டா மணியின் இறப்புக்கு நடிகர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







