நள்ளிரவில் #Samsung தொழிலாளர்கள் கைது… அரசியல் கட்சி தலைவர்கள் சந்திக்க இருந்த நிலையில் போலீசார் நடவடிக்கை என தகவல்!

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் இந்தியா…

Arrest of #Samsung workers in the middle of the night... New move by the police when political party leaders were to meet!

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம். தென்கொரிய நிறுவனமான இதில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

நல்ல லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்நிறுவனம், குறைந்த சம்பளத்திற்கு தொழிலாளர்களை அதிக வேலை வாங்குவதாகவும், நடைமுறை சாத்தியமில்லாத இலக்கினை நிர்ணயித்து பலமணி நேரங்கள் கூடுதலாக வேலை வாங்குவதாகவும் , தங்களின் பிரச்சனைகளை களைவதற்காக தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியை தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிஐடியு தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டு , சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களும் வழங்கிய பிறகும், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையோ சங்கத்தை பதிவு செய்ய மறுக்கிறது என்றும், தமிழ்நாடு அரசு அந்நிய நாட்டு சாம்சங் நிர்வாகத்திற்கு சாதகமாக இருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10க்கும் மேற்பட்டோரை கைது செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் போராட்ட திடல்களில் இருந்த பந்தல்களையும் பிரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்களான செல்வப்பெருந்தகை, முத்தரசன், பாலகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டோர் போராடும் தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க இருந்த நிலையில், காவல்துறை இந்த இந்த நகர்வை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.