பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 10 முக்கிய குற்றவாளிகள் தொடர்பான விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ அவகாசம் கோரியதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 25ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளின் ஜாமீன் தொடர்பான வழக்கு நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.பி.சிங், ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படும் அருள், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சிவா, விஜய், கோகுல் மற்றும் சந்தோஷ் ஆகிய 10 பேர் தொடர்பான முழு விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.
அதற்கு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, சிபிஐ சுட்டிக் காட்டிய 10 நபர்களுக்கும் தனியாக ஜாமீன் வழங்கப்பட்டது, எனவே அந்த நபர்களின் விவகாரத்தை இந்த வழக்குகளோடு இணைக்க கூடாது என்றும் இந்த மனுக்களை தனியாக விசாரித்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால், நீதிபதிகள் சி.பி.ஐ கோரிய கால அவகாசத்தை வழங்கி, வழக்கு மீதான விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்
முன்னதாக கடந்த 3ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது முக்கிய குற்றவாளிகள் 10 பேருக்கு எதிராகப் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இந்த நபர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து, அவர்களிடம் முழுமையான விசாரணை நடத்துவதற்கும், உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என சி.பி.ஐ தரப்பில் கோரப்பட்டது.
அதனை ஏற்ற உச்சநீதிமன்றம், எந்தெந்த குற்றவாளிகளிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டியுள்ளது, யாருடைய ஜாமினை ரத்து செய்ய வேண்டும், ஒவ்வொருவர் மீதான குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் தீவிரம் என்ன உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்படத்தக்கது.




