இந்தியாவின் பிரளய் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை!

ஒடிசா கடற்கரையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரளய் ஏவுகணையை இந்தியா இன்று (நவ.5) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘பிரளய்’ (Pralay) எனும் குறுகிய தொலைவு தரையிலிருந்து தரையைத் தாக்கும் ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இன்று (நவ.5) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. ஒடிசா கடற்கரையில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

பிரளய் ஏவுகணையின் சிறப்பம்சங்கள்!

திட எரிபொருளில் இயங்கும் இந்தப் பிரளய் ஏவுகணை, அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்துதல் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் மிகத் துல்லியமாக இலக்குகளைத் தாக்க முடியும். இந்த ஏவுகணை 150 முதல் 500 கி.மீ. வரையிலான தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன் கொண்டது. மேலும், 500 முதல் 1,000 கிலோ எடை வரையிலான வெடிகுண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் பெற்றுள்ளது. பல்வேறு வகையான மரபுவழிப் போர்க்கருவிகளையும் இதில் பொருத்த முடியும்.

அனைத்து சோதனை இலக்குகளும் எட்டப்பட்டன!

பயனாளர் மதிப்பீட்டுச் சோதனைகளின் (User Evaluation Trials) ஒரு பகுதியாக இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டது. இன்று காலை 11.10 மணிக்கு நடைபெற்ற சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளும் வெற்றிகரமாக எட்டப்பட்டதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையம் (Integrated Test Range) உள்ளிட்ட பல்வேறு கண்காணிப்புக் கருவிகள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளப் பதிவில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரளய் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சாதனை இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்துவதில் மற்றொரு முக்கிய மைல்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

DRDO மற்றும் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு!

ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையமான இமாரத் (Research Centre Imarat) மற்றும் DRDO-வின் பிற ஆய்வகங்கள் இணைந்து இந்த ஏவுகணையை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளன. இதன் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் பங்குதாரராக உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (Bharat Dynamics Limited) நிறுவனம் இந்த ஏவுகணையைத் தயாரித்துள்ளது. DRDO அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை சார்ந்தவர்கள் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற்றது.

விரைவில் ராணுவத்தில் இணைப்பு!

பிரளய் ஏவுகணையின் இந்த வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து, இதனை ராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பத் திறனையும் செயல்பாட்டுத் தயார்நிலையையும் மேலும் அதிகரிக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெற்றிகரமான சோதனையில் ஈடுபட்ட DRDO விஞ்ஞானிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் தொழில்துறை கூட்டாளர்களுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். DRDO தலைவரும் பாதுகாப்புத் துறைச் செயலாளருமான ராஜேஷ் குமார் சிங்கும் இந்தச் சோதனையில் பங்களித்த குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.