முக்கியச் செய்திகள் தமிழகம்

பல்லுயிர் வாழ்விடமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி – இயற்கை ஆர்வலர்கள், கிராம மக்கள் மகிழ்ச்சி

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமப் பகுதியை மாநிலத்தின் முதல் பல்லுயிர் வாழ்விடமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரிட்டாபட்டியின் பின்னணியை விளக்கும் செய்தி இதோ. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமம் 72 ஏரிகளையும், வற்றாத நீர் ஊற்றுகளையும் மூன்று தடுப்பணைகளையும் கொண்டுள்ளது. இங்கு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சமண சிற்பங்கள், குடைவரை கோயில்கள், ஏழு மலைக்குன்றுகள், அரியவகை பறவை இனங்கள் உள்ளிட்டவற்றை காணமுடியும்.இரட்டைவால் குருவி, மஞ்சள் வாலாட்டி குருவி, ராஜாளி, கோம்பன் ஆந்தை உள்ளிட்ட 275 வகை பறவை இனங்கள் இங்கு வாழ்ந்து வருவதை பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். இதுதவிர, அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினங்களும், 700க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகையை வரலாற்று சிறப்புமிக்க அரிட்டாபட்டி, அதையொட்டி உள்ள மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 477 புள்ளி 24 ஏக்கர் நிலப்பரப்பை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரிட்டாபட்டி பகுதியில் பாண்டியர்கள் ஆட்சி காலத்தின்போது 16-ம் நூற்றாண்டில் ஆனைகொண்டான் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கிராமத்தின் மக்கள், விவசாயத்தை எந்தஒரு சூழ்நிலையிலும் கைவிட்டதில்லை என பெருமிதம் தெரிவிக்கின்றனர். அரசுப் பணிக்கே சென்றாலும், விவசாயத்தை தொடர்ந்து மேற்கொள்வதாக கூறுகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு அரிட்டாபட்டி மலைக்குன்றுகளில் இருந்து கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பதற்காக சிலர் வந்த போது, கிராம மக்கள் ஒன்று கூடி போராட்டத்தின் மூலம் தடுத்தனர். அப்போதுதான், இயற்கையின் கொடையாக இருக்கும் கிராமத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அரிட்டாப்பட்டி மலைக்குன்றுகளில் இன்றும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. மேலும், இங்குள்ள சமணர் கால சிற்பங்கள், படுகைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், குடைவரை கோயில்கள் உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள், இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கி.பி 7-ம் நூற்றாண்டில் சிவபெருமானுக்காக கட்டப்பட்ட குடைவரை கோயில் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாக திகழ்கிறது. இங்கு காணப்படும் லகுலீசர் சிலை தமிழ்நாட்டில் வேறு எங்கும் காண கிடைக்காத அற்புதமாக உள்ளது. மேலும், அரிட்டாபட்டியில் பஞ்ச பாண்டவர்களும், முனிவர்களும் வாழ்ந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இயற்கை ஆர்வலர்கள் அரிட்டாபட்டிக்கு வருகை தருகின்றனர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் இங்குள்ள பல்லுயிர் இனங்களை காண்பதற்காக வந்து செல்கின்றனர்.

இயற்கை வளங்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் கொண்டுள்ள அரிட்டாபட்டிக்கு பல்லுயிர் தலம் என்ற அங்கீகாரம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. இப்பகுதியில் வசிக்கும் மக்கள், இயற்கை ஆர்வலர்கள், பல்லுயிர் பாதுகாப்பு குழுவினர் என பல்வேறு தரப்பினர் பல ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பிறகே, பல்லுயிர் தலமாக அரிட்டாபட்டி அறிவிக்கப்பட்டு, கவனம் ஈர்த்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி இயற்கை ஆர்வலர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல்லுயிர் பாதுகாப்புக்கான முயற்சிகளை வலுப்படுத்தவும், மாபெரும் வரலாற்று களஞ்சியத்தை பாதுகாக்கவும் முழுமையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசுக்கு வழங்குவோம் என்று மகிழ்ச்சி பொங்க அரிட்டாபட்டி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

  • ரமேஷ்,  மேலூர் செய்தியாளர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்

Gayathri Venkatesan

ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

Halley Karthik

“நஷ்டத்தில் இயங்கும் டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படைக்க தயாரா” -அண்ணாமலை கேள்வி

G SaravanaKumar