முக்கியச் செய்திகள் கட்டுரைகள் வணிகம் Health

அச்சம் தருகின்றனவா மாம்பழங்கள்?


பால. மோகன்தாஸ்

கட்டுரையாளர்

சென்னை கோயம்போடு பழ சந்தையில் மாம்பழங்கள் அனைத்தும் செயற்கையாகத்தான் பழுக்க வைக்கப்படுகின்றன என மாம்பழ வியாபாரிகள் கூறி உள்ள நிலையில், அவற்றை வாங்குவதில் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாம்பழங்களை அச்சமின்றி வாங்க வழி உள்ளதா என்பதை ஆராய்கிறது இந்த கட்டுரை.

 

முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால், சந்தைக்கு விதவிதமான மாம்பழங்கள் வரத் தொடங்கி உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றும் இந்த மாம்பழங்கள், தற்போது அச்சம் தரக்கூடியவையாக மாறி உள்ளன. இதன் காரணமாக மாம்பழங்களைப்
பார்க்கும்போது, நம்பி வாங்கலாமா என்ற கேள்வியே முதலில் எழுகிறது.

இதற்கு ஒரே காரணம், பெரும்பாலான மாம்பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுவதே.

 

நடவடிக்கை எடுக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்:

சமீபத்தில் சென்னை கோயம்போடு பழ சந்தையில், ரசாயன முறையில் பழுக்கவைக்கப்பட்ட 8 ஆயிரம் கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர்
பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். இது முதல்முறை அல்ல. இத்தகைய பறிமுதல்கள் பல ஆண்டுகளாக அடிக்கடி நடக்கின்றன. எனினும், ரசாயன முறையில்
மாம்பழங்களை பழுக்க வைப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மாற்றுவழியை எதிர்நோக்கும் வியாபாரிகள்:

மாம்பழங்கள் பறிமுதலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோயம்போடு பழ சந்தை வியாபாரி ஒருவர், கோயம்போடு பழ சந்தையில் அனைத்து
மாம்பழங்களுமே ரசாயன முறையில்தான் பழுக்க வைக்கப்படுவதாகவும், அதிகாரிகள் மாம்பழங்களை பறிமுதல் செய்வதால் தங்களுக்கு பெருத்த இழப்பு
ஏற்படுவதாகவும் கூறி இருந்தார். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் தங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள்
விடுத்திருந்தார்.

ரசாயன முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி அவ்வாறு பழுக்க வைத்தது தவறுதான். அதை
நியாயப்படுத்த முடியாது. என்றாலும், வியாபாரிகளுக்கு உரிய வழிகாட்டலை அரசு இதுவரை ஏன் வழங்கவில்லை என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

மாம்பழங்கள் இயற்கையாக பழுக்க 2 வாரங்கள் ஆகும் என்பதாலேயே, கால்சியம் கார்பைடு என்ற ரசாயன கல்லைக் கொண்டோ அல்லது எத்திலின் என்ற
ரசாயனம் கலந்த திரவத்தை பயன்படுத்தியோ செயற்கையாக உடனடியாக பழுக்க வைக்கச் செய்வதாக கூறுகின்றனர் வியாபாரிகள்.

முழுமையாக பழுக்காத மாம்பழக் குவியலுக்குள் கால்சியம் கார்பைடு கல்லை வைத்துவிட்டால், அவை விரைவாக பழுத்துவிடும் என்றும், இதேபோல், எத்திலின்
ரசாயனத்தை தெளித்தாலும் அவை உடனடியாக பழுத்துவிடும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

எச்சரிக்கும் மருத்துவர்கள்:

இத்தகைய மாம்பழங்களை உண்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக, வயிற்றுபோக்கு, தலைவலி, மயக்க
உணர்வு, நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இயற்கையான முறையில் மாம்பழங்களை விரைவாக பழுக்க வைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர் வேளாண் நிபுணர்கள். அவர்கள் கூறும் வழிமுறைகள் குறித்து தற்போது பார்ப்போம்.

வழிமுறை 1:

மாங்காய்களை இயற்கை முறையில் பழுக்க வைக்க, அறுவடையில் இருந்தே கவனமாக இருக்க வேண்டும். நன்றாக விளைந்த, முற்றியக் காய்களை மட்டுமே
அறுவடை செய்ய வேண்டும். நன்கு முதிர்ந்த காய்களின் காம்பு அருகே லேசாக ஒரு குழி ஏற்படும். இதை கவனித்து இந்தக் காய்களை மட்டும் அறுவடை
செய்தால் அவை அடுத்த நாளே பழுத்து விடும்.

வழிமுறை 2:

மாங்காய்களை அறுவடை செய்யும்போது, காம்புடன் அறுவடை செய்ய வேண்டும். பின்பு, பழைய பேப்பரை கீழே விரித்து அதில் காம்புகள் தரையில் படுமாறு
காய்களைத் தலைகீழாக அடுக்கி வைக்க வேண்டும்; இவ்வாறு அடுக்கி வைப்பதன் மூலம், அதில் உள்ள பால் முழுவதும் வடிந்து விடும். பிறகு, அவற்றை எடுத்து
தண்ணீரில் கழுவி, மறுபடியும் வரிசையாக அடுக்கி, ஈரம் காய்ந்ததும் அதன் மேல் சணல் சாக்கை போட்டு மூடி வைத்து விட்டால், ஒன்று அல்லது இரண்டு
நாட்களில் அவை பழுத்து விடும்.

வழிமுறை 3:

வைக்கோலைப் பரப்பி, அதன் மீது மாங்காய்களை அடுக்கி, பின்பு வைக்கோலால் மூடி விடவேண்டும். வைக்கோலில் இருந்து கிளம்பும் வெப்பத்தினால்
மாங்காய்கள் ஓரிரு தினங்களில் பழுத்து விடும்.

வழிமுறை 4:

சூரிய ஒளி புகாத இருட்டு அறையில் மாங்காய்களை அடுக்கி வைத்தால், அறையில் வெப்பம் அதிகரித்து புழுக்கம் உண்டாகி, அதன் மூலம், அவை விரைவாக
பழுத்து விடும்.

இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி மாங்காய்களை பழுக்க வைத்தால், வியாபாரிகளும் பலன்பெற முடியும்; அவற்றை வாங்கி உண்ணும் பொதுமக்களும்
பலன்பெற முடியும்.

மாம்பழ வியாபாரிகள் இதற்கு முன்வருவார்களா?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தலுக்குப் பிறகு மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!

Ezhilarasan

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 47 லட்சம்: உலக சுகாதார நிறுவனம்

Ezhilarasan

சோம்பேறிகளைத் தீவிரமாகத் தாக்கும் கொரோனா; ஆய்வில் தகவல்!

Saravana Kumar