ஆரணியில் உள்ள அசைவ உணவகத்தில் பிரியாணி தந்தூரி சாப்பிட்ட 12ஆம் வகுப்பு
மாணவன் வயிறு உபாதை ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது தந்தை ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள முக்கிய உணவகங்களில் அசைவ உணவகம் ஒன்றில் கடந்த 24 ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஆரணி தனியார் பள்ளி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வை முடித்த சந்தோஷத்தில் பிரியாணி மற்றும் தந்தூரி வகைகளை சாப்பிட்டனர். இதில் ஆரணியில் பிரபல கல்வி நிறுவன அதிபர் கணேஷ் மகன் திருமுருகனும் சக மாணவர்களுடன் சாப்பிட்டார். பின்னர் அன்று இரவிலிருந்து திருமுருகனுக்கு வயிறு உபாதைகள் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். பின்னர் வயிறு வலி சரியாகவில்லை என்பதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் திருமுருகன் ஃபுட் பாய்சன் காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, உயிரிழந்த மாணவரின் தந்தை கணேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், “ஆரணியில் உள்ள எலைட் பைவ் ஸ்டார் பிரியாணி சென்டரில் பிரியாணி மற்றும் தந்தூரி வகை சாப்பிட்டதால் எனது மகன் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இறந்துவிட்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரணியில் உள்ள 7 ஸ்டார் பிரியாணி சென்டரில் பிரியாணி சாப்பிட்ட பத்தாம் வகுப்பு மாணவி லோஷினி மற்றும் 20க்கும் மேற்பட்டோர் ஃபுட் பாய்சன் ஆகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் லோஷினி இறந்த சம்பவம் மறைவதற்குள் மீண்டும் ஒரு மாணவன் ஆரணியில் பிரியாணி சாப்பிட்டு இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தரமற்ற அசைவ உணவுகளை வழங்கி வரும் ஹோட்டல்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.








