பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

கருணாநிதி நினைவிடம் மற்றும் பேனா நினைவுச் சின்ன கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்…

கருணாநிதி நினைவிடம் மற்றும் பேனா நினைவுச் சின்ன கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக ரூ.81 கோடியில் ‘‘பேனா‘‘ சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரித்து, அதனை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. இதனை பரிசீலித்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கி, சில நிபந்தனைகளும் விதித்தது.

அதன்படி, பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு முன்பாக ஐ.என்.எஸ் கடற்படை தளத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றும், பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணிகளுக்காக எந்த நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது என்றும், திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைத்து அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இதனால், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கான பணிகள், மற்றும் பேனா நினைவுச் சின்ன பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதனை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள நினைவிடங்கள், நினைவுச் சின்னங்களின் கட்டுமான பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கான வடிவமைப்பு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தை புதுப்பித்தல், புதிய நினைவிடங்களுக்கான கட்டுமான பணிகள் மற்றும் பழமை வாய்ந்த கட்டடங்களை சீரமைத்தல் ஆகியவற்றையும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள விஸ்வநாதனே கண்காணிப்பார் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.