அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்கு எதிராகவும், தங்களது காவலில் விசாரணைக்கு எடுக்க அனுமதிக்கக்கோரியும் அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், திபான்கர் தத்தா அடங்கிய அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.

அமலாக்கத்துறை தரப்பில் வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா ”சென்னை உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு மீது இரு வேறு தீர்ப்புகளை இன்று வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தக்கூடாது, காலம் தாழ்த்தும் ஒவ்வொரு மணித்துளியும் வழக்கை நீர்த்துபோக செய்யும்” என வாதிட்டார்.
மேலும் ரிமாண்ட் செய்யப்பட்ட பின்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது சட்டப்பூர்வமானது அல்ல, எனவே இந்ந ஆட்கொணர்வு மனு விவகாரத்தில் எழும் சட்ட கேள்விகளுக்கு உச்சநீதிமனறமே விடை காண வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்ர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ” உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி முடிவுக்காக வழக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற நடவடிக்கையை புறந்தள்ளிவிட்டு எவ்வாறு உச்சநீதிமன்றம் முடிவெடுக்க வேண்டுமென கோர முடியும்” என கேள்வி எழுப்பினார்.
மேலும் செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி “ ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் முடிவெடுக்கட்டும் என உச்சநீதிமன்றம் கடந்த முறை கூறியுள்ளது. எனவே தற்போதைய நிலையில் மூன்றாவது நீதிபதி முடிவுக்கு காத்திருப்பதில் என்ன பிரச்சனை” என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வெகு விரைவில் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கை விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் வழக்கை விரைந்து மெரிட் அடிப்படையில் விசாரித்து முடிக்கவும், ஒரு வாரத்திற்குள் அமர்வு அமைக்கவும் அறிவுறுத்தினர். மேலும், அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







