‘எந்த திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வேண்டும்’

எந்தத் துறையாக இருந்தாலும், அதனை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் துறை மாநாட்டைத் தமிழ்நாடு…

எந்தத் துறையாக இருந்தாலும், அதனை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் துறை மாநாட்டைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச்செயலாளர் இறையன்பு, தொழில்துறைச்செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,250 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 37,450 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்வில் பேசிய தலைமைச்செயலாளர் இறையன்பு, ஒரு வகையான காலணி எல்லாருக்கும் பொருந்தாது. காலணி உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் திகழ்கிறது. ஒற்றைச்சாளர முறையில் அனுமதிகள் எளிதாகத் தொழில் தொடங்க வழங்கப்பட்டு வருகின்றது. மனிதவளம், உள்கட்டமைப்பு உகந்ததாக உள்ளது. காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை தொழில் மண்டலம், தொழில் பூங்காக்கள் உருவாக்க வழிவகுக்கும் செருப்புகளுக்கும் தத்துவப்பார்வை உண்டு. தொழிலாளர் என்ற வார்த்தைக்கும் சிறப்பு இருக்கின்றது. தொழிலை வளர்ப்போம், தொழிலாளர்களைக் காப்போம் எனக் கூறினார்.

https://twitter.com/CMOTamilnadu/status/1561968433008619520

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டுக் காலம் முடிவுற்ற நிலையில் இது 7 ஆவது முதலீட்டாளர் மாநாடு. இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த மாநிலத்திலும் நடைபெற்றிருக்கிற வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இது அடையாளம் எனக் கூறினார். மேலும், தொழில்துறையானது மிகச்சிறப்பானவர்களால் நிர்வகிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிப் பாராட்ட விரும்புகிறேன் எனத் தெரிவித்த அவர், எந்த திட்டமிடுதலாக இருந்தாலும் அது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அமையவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அண்மைச் செய்தி: ‘கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பு; 10 நாட்களுக்குள் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!’

தொடர்ந்து பேசிய அவர், அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிற்சாலைகள் பின் தங்கிய மாவட்டங்களில் அமைவதன் மூலம் வளர்ச்சி அடையளாம் எனத் தெரிவித்த அவர், எந்தத் துறையாக இருந்தாலும் அதை முன்னோக்கிச் செல்ல கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். பசுமை ஹைட்ரஜன் கொள்கை, எத்தனால் கொள்கை உள்ளிட்ட பல கொள்கைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. எந்த முதலீட்டுச் சூழலுக்கும் அரசு தயாராக உள்ளது எனக் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்கள் உலக அளவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனத் தெரிவித்த அவர், ரூ.20,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். பெண்களுக்குப் பெருமளவு அதிக அளவு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. இந்தத்துறை தோல் அல்லாத உற்பத்திப் பொருட்கள்தான் 70% அதிகமாகச் சந்தையில் விற்கப்படுகின்றது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதை நமது கடமைகளில் ஒன்றாகக் கருத வேண்டும். சீனாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்யப்படும் நிலை உள்ளது. ஆனால், இராணிப்பேட்டையில் அமையும் பூங்கா மூலம் நாமே உற்பத்தி செய்ய முடியும். காலணிகள் ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படையானவை, முக்கியமானவை எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.