திருவாரூர் மாவட்ட கோயிலில் உள்ள சுவாமி சிலைகள் அமெரிக்காவில் உள்ளதால், சிலைகளுக்கு உரிமைக்கோரி தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கடிதம் எழுதியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து 3 பழமையான சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பான விசாரணை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விசாரணையில் மர்ம நபர்கள் கோயிலில் இருந்து உலோக சிலைகளை திருடிவிட்டு அதற்கு பதிலாக போலியான சிலைகளை பிரதிஷ்டை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலைகளின் சரியான புகைப்படம் இல்லாத நிலையில் பிரெஞ்ச் இன்ஸ்டியூட் ஆஃப் பாண்டிச்சேரி உதவியுடன் உரிய புகைப்படங்களை பெற்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், திருடப்பட்ட சிலைகளில் சோமஸ்கந்தர் சிலை மற்றும் நடன சம்மந்தர் ஆகிய இரு சிலைகள் அமெரிக்காவில் உள்ள கிரிஸ்டி உள்ளிட்ட இரு ஏல மையங்களுக்கு 2011 ஆம் ஆண்டு 81 லட்சத்து 54 ஆயிரத்து 839 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கிரிஸ்டி மற்றும் ஃபிரீயர் சாக்லர் அருங்காட்சியகம் ஆகிய இரண்டின் இணையதளத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்காணித்தனர்.
அப்போது, சோமஸ்கந்தர் சிலை மற்றும் நடன சம்மந்தர் சிலைகள் அதிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விரைவில் சிலைகள் மீட்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டு சம்மந்தப்பட்ட கோயிலில் ஒப்படைக்கப்படும் என தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஏற்கனவே இக்கோயிலுக்கு சொந்தமான யோக நரசிம்மர் சிலை அமெரிக்காவில் உள்ள நெல்சன் அட்கின்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான உரிமை கோரியும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.