உலகத்துக்கு ஒளியை கொண்டு வரும் ஆற்றல் நமக்குண்டு என்பதையே தீபாவளிப் பண்டிகை உணர்த்துவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் தீபாவளிப் பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி வெள்ளை மாளிகையில் வண்ணமயமான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அதிபரின் மனைவி ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தீபாவளி நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இளம் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி விருந்தினர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ஜோ பைடன், தீபாவளிக் கொண்டாட்டம் அமெரிக்க பண்பாட்டின் மகிழ்ச்சியான ஒரு பகுதி என்று கூறினார். உலகத்துக்கு ஒளியைக் கொண்டு வரும் ஆற்றல் நமக்குள்ளது என்பதையே தீபாவளிப் பண்டிகை நினைவுகூர்வதாகவும் ஜோ பைடன் கூறினார்.
துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேசுகையில், வலிமைவாய்ந்த சில சக்திகள் வெறுப்பையும் பிரிவினையையும் விதைத்து வந்தாலும், அமைதி மற்றும் நீதிக்காக போராட வேண்டும் என்பதையே தீபாவளிப் பண்டிகை நமக்கு நினைவூட்டுவதாக கூறினார்.