தமிழ்நாடு பாஜகவை இரு ஆண்டுகளுக்கு தாருங்கள், பிறகு பாருங்கள், இந்து விரோதிகளை திஹார் சிறையில் பார்க்கலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதை நாம் செய்ய வேண்டியதே முதல் பணி என தெரிவித்திருந்தார்.இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி மீது டெல்லி உள்ளிட்டபல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை கோரி என் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள், முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :
தமிழ்நாடு பாஜக கோழைத்தனமாக உள்ளது. தமிழ்நாடு பாஜகவை இரண்டு ஆண்டுகளுக்கு என்னிடம தாருங்கள். பிறகு பாருங்கள். தமிழ்நாட்டில் உள்ள இந்து விரோதிகளை திஹார் சிறையில் சந்திக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.







