கர்நாடகாவில் பசுவதை தடுப்புச் சட்டம் திரும்பப் பெறப்படுமா?

கர்நாடாகாவில் பாஜக அரசு கொண்டுவந்த பசுவதை தடுப்புச் சட்டம் குறித்து வரவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.  எருமை மாடுகளை வெட்டலாம் என்றால் பசுக்களை ஏன் வெட்டக்கூடாது…

கர்நாடாகாவில் பாஜக அரசு கொண்டுவந்த பசுவதை தடுப்புச் சட்டம் குறித்து வரவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். 

எருமை மாடுகளை வெட்டலாம் என்றால் பசுக்களை ஏன் வெட்டக்கூடாது என கர்நாடக கால்நடைத்துறை அமைச்சர் கே.வெங்கடேஷ் அண்மையில் பேசியிருந்தார். வயதான பசுக்களை வெட்டுவதால் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை குறைக்க முடியும் எனவும் கூறியிருந்தார். 12 வயதிற்கு மேற்பட்ட பசுக்களை கொல்வதில் தவறில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சரும் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான வி.சுனில் குமார், ”காங்கிரஸ் தேசத்தையோ பசுவையோ நேசிப்பதில்லை, மக்கள் பின்பற்றும் நெறிமுறைகளை காங்கிரஸ் வெறுக்கிறது, அதற்கு பசுவதை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதே ஒரு உதாரணம்” என்று கூறினார். 

பாஜகவின் மற்றொரு முன்னாள் அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுமாறு முதல்வர் சித்தராமையா மற்றும் பிற காங்கிரஸ் அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், பாஜக கொண்டுவந்த பசுவதை தடுப்புச் சட்டத்தில் தெளிவு இல்லை எனவும், அதுகுறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் எனவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.