டெல்லியில் இருந்து பாங்காக்குக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் சென்றது. இதில் பயணித்த ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளார். விமானம் தரையிறங்கும் சமயத்தில் இது நடந்துள்ளது. ஏர் இந்தியா இதுகுறித்து டிஜிசிஏவுக்கு புகாரளித்ததாகவும் தகவல் வெளியாகியது. விமான பயணி துஷார் மசந்த், தன் அருகே அமர்ந்திருந்த ஹிரோஷி யோஷிசானே மீது சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனே ஹிரோஷி விமான பணிப்பெண்ணிடம் புகார் அளித்தார். விமான பணியாளர்களான சுன்ப்ரீத் சிங் மற்றும் ரிஷிகா மாத்ரே ஹிரோஷிக்கு மாற்று துணிகள் வழங்கியுள்ளனர். துஷாரை வேறு ஒரு இருக்கையில் அமருமாறு கூறிய விமான பணியாளர்கள் விமான கேப்டனுக்கும் தகவல் தெரிவித்தனர். தன் தவறுக்காக மசந்த், அந்த பயணியிடம் மன்னிப்புக் கேட்டதாகவும், அந்த மன்னிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
விமானம் தரையிறங்கிய பிறகு அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை. புகார் இல்லாமலேயே, துஷார் மசந்த்துக்கு வாய்மொழி எச்சரிக்கையை விமான நிறுவன அதிகாரிகள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், 2022ஆம் ஆண்டு நடந்த இதுபோன்ற மற்றொரு சம்பவத்தை நினைவுக்கூறுகிறது. மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர் நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் ஒரு வயதான பெண் மீது சிறுநீர் கழித்ததற்காக கைது செய்யப்பட்டார்.







