தமிழக பாஜகமாநில தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி துவங்கியது. இதில் தற்போதைய பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை விருப்ப மனு தெரிவிக்காத நிலையில் கட்சியின் பல மூத்த தலைவர்கள் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் சட்டமன்றத் தலைவரான நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பலர் வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் நயினார் நாகேந்திரன் ஒருமனதாக பாஜக மாநிலத் தலைவராகிறார். இதன் மூலம் தமிழக பாஜகவின் 9வது தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
யார் இந்த நயினார் நாகேந்திரன்?
- நயினார் நாகேந்திரன் முதுகலை பட்டம் படித்தவர்
- கல்லூரியில் படிக்கும் காலத்தில் நெல்லை பகுதி அதிமுக மாணவர் அமைப்பில் பணியாற்றினார்
- மாவட்ட அதிமுக இலக்கிய மாணவர் துணைச் செயலாளராக இருந்த அவர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராகவும் செயல்பட்டார்
- புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தார்
- அதிமுக சார்பில் 2001 – 2006 மற்றும் 2011 – 2016 காலகட்டங்களில் திருநெல்வேலி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்
- 2001 – 2006 காலகட்டங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் மின்சாரம் , போக்குவரத்து மற்றும் தொழில்துறை அமைச்சராக செயல்பட்டார்
- இதன் பின்னர் பாஜகவில் இணைந்த அவர் பாஜக மாநிலத் துணைத் தலைவரானார்
- 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
- இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்
- தற்போது தமிழக பாஜகவின் 9வது மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.








