கோவை மற்றும் செங்கல்பட்டு நகரத்தை தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் 4 வழிச்சாலைகள் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், புதிய ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பளிப்பது ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதாக குறிப்பிட்ட அமைச்சர் எ.வ.வேலு, பகைவருக்கும் அருளும் பண்புடையவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டவர்களை அவர் நினைவு கூர்ந்தார். கருணாநிதியால் 500-க்கு மேற்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், 200-க்கு மேற்பட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர்களாகவும் ஆகியுள்ளதாக குறிப்பிட்டார். இவர்கள் அத்தனை பேருக்கும் கிடைக்காத வாய்ப்பை தனக்கு வழங்கியதை எண்ணி காலம் உள்ளவரை நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என்று கூறியபோது, கண்கலங்கியவாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். அதன்படி, சென்னை அண்ணா சாலையில், 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 485 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் குன்றத்தூர் சாலை சந்திப்பில் 322 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள 435 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றும் திட்டம் ஆயிரத்து 105 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
மேலும், மேற்கு தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் கோவை மற்றும் செங்கல்பட்டு நகரங்களை தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் 4 வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
இதன்படி, செங்கல்பட்டு நகரத்தை திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் 4 வழிச்சாலை அமைக்க 4 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்றும்,இதேபோல், கோவை மாநகரை பொள்ளாச்சி, பழனி, ஆத்தூர் வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் 4 வழிச்சாலை அமைக்க 4 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.







