அந்நியன் திரைப்படத்தை இந்தியில் ரிமேக் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன் இயக்குநர் ஷங்கரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
2005ம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் ’அந்நியன்’. இத்திரைப்படத்தை இயக்குநர் சங்கர் இயக்கி இருந்தார். இப்படம் வசூல்ரீதியாக பெரும் வெற்றிப்பெற்றது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியில் ரிமேக் செய்ய உள்ளார். இதில் நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் சட்டவிரோதமாக நடந்து கொள்கிறார் என்றும் இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்று அன்னியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன் விளக்கம் கேட்டு ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இந்த நோட்டீஸில் அந்நியன் கதையின் காப்புரிமையை எழுத்தாளர் சுஜாதாவிடம் இருந்து பெற்றது தான் என்றும் அதற்கான கட்டணத்தை தான் முறையாகச் செலுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனது அனுமதியில்லாமல் இத்திரைப்படத்தை இயக்குநர் சங்கர் இந்தியில் எடுப்பது சட்டவிரோதம் என்றும் படத்தின் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.







