கம்யூனிஸ்டு ஆட்சி அகற்றப்படும் -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் விரைவில் அசுரர்கள் களையெடுப்பு நடத்தி ஆட்சி அகற்றப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆறுகாணி பகுதியில் உள்ள…

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் விரைவில் அசுரர்கள் களையெடுப்பு நடத்தி ஆட்சி அகற்றப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆறுகாணி பகுதியில் உள்ள ஒருநூரணிமவயல் என்ற மலைகிராமத்தில் உள்ள காணி இனத்தை சேர்ந்த பழங்குடியின மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களோடு கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவர்களுடன் மதிய உணவு அருந்தினார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கேரள மாநில பா.ஜ.க தலைவர் சுரேந்திரன், குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து காளிமலை பொங்கல் நிகழ்சியில் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அங்கு நடந்த வாழ்த்தரங்கில் சிறப்பு உரையாற்றினார்.  அப்போது நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், இரத்த தான கொடையாளர்கள் , இயற்கை விவசாயிகள் , பழங்குடியின மக்களுக்கு இலவச கல்வி அளிக்கும் ஆசிரியர் , இலவச மருத்துவம் அளிக்கும் மருத்துவர் , சிறந்த ஆன்மீகத்தை போதிப்பவர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், யார் யாரோ வந்து அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க ஆண்டவர் விரும்பவில்லை. கட்சித் தொண்டர்கள் , தலைவர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆன்மா சுத்தப்படுத்தபட்டு நாங்கள் அந்த பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். மக்கள் பணிக்காக நாம் தயார் நிலையில் இருக்கும் போது ஆண்டவன் நமக்கு கட்டளையிடுவான்.

அப்போது மிக விரைவில் அசுரர்கள் களையெடுப்பு நடக்கும். அந்த நேரத்தில் கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அகற்றப்படும் , தமிழகத்தில் நடைபெறும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அகற்றப்படும்.  இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமையும் என்று அண்ணாமலை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.