தனியார் நிறுவன ஊழியர்களை தாம்பரம் திமுக எம்எல்ஏ மிரட்டியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததோடு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை அடுத்த மெல்ரோசபுரம் பகுதியில் பூஜா கோயல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், தனியார் நிறுவனம் 10 ஆண்டு குத்தகைக்கு செயல்பட்டு வருகிறது. இதனிடையே பூஜா கோயல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை முன்கூட்டியே வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார். தங்களுக்கான குத்தகை காலம் முடிவடையாததால் வெளியேற முடியாது என தனியார் நிறுவனத்தினர் திட்டவட்டமாக கூறி வந்துள்ளனர்.
இதுகுறித்து பூஜா கோயல் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவிடமும் தங்களுக்கு உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக தனியார் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாடாத நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தகாத வார்த்தையில் பேசி கை கால்களை உடைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
https://twitter.com/annamalai_k/status/1572605712018341888
இது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ காட்சிகள் நியூஸ் 7 தமிழில் முதலில் செய்தியாக வெளியிடப்பட்டது. பின்னர் சமூகவலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது. இந்நிலையில், இந்த வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்ததா? அல்லது திமுக ஆட்சியால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்ததா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் இந்த இரண்டில் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எது என்று தனக்கு ஆச்சர்யமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-இரா.நம்பிராஜன்








