மக்களை திசை திருப்ப அண்ணாமலை வாய்க்கு வந்ததை பேசுகிறார்- அமைச்சர் அன்பில் மகேஸ்!

மக்களை திசை திருப்புவதற்காக அண்ணாமலை வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதலமைச்சரின்  70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு…

மக்களை திசை திருப்புவதற்காக அண்ணாமலை வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதலமைச்சரின்  70 ஆவது
பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது..

”கடந்த 10 வருடமாக தமிழகத்தை ஆண்டவர்கள் பாலைவனமாக விட்டு சென்று விட்டனர். அந்த பாலைவனத்தை பதப்படுத்தி, பன்படுத்தி நாட்டின் வளர்ச்சி என்ற விளைச்சலை தந்து நம்பர் ஒன் முதலமைச்சர் என்ற பெயரை தமிழ்நாடு முதலமைச்சர் வாங்கி உள்ளார்.  வடநாட்டு பத்திரிகை கூட தமிழ் மாநிலம் தான் நம்பர் ஒன் மாநிலம்,  ஸ்டாலின் தான் நம்பர் ஒன் முதல்வர்  என்று பாராட்டுகிறது.

ஒரு கட்சியின் மாநில தலைவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பட்டியலை
வெளியிட்டுள்ளார். அது பழைய படங்களில் வரும் நகைச்சுவை காட்சியைப் போல. அதில்  ஒருவர் ஆயிரம்  என்பார் மற்றவர் 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம் என்று அவை காட்சியமைக்கப்பட்டிருக்கும்.

அதுபோலத்தான் அவர் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொத்து மதிப்பு 1023 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். அதனை அவர்  நிரூபிக்கவில்லை என்றால் 500 கோடி அபராதம் தர வேண்டும் என தலைமை
கழகத்திலிருந்து அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

1023 கோடி சொத்து இருந்தால் அதை நீங்களே  விற்று கொடுங்கள்.  தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக  38 ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டரை
லட்சத்திற்கு அந்த பணத்தை வைத்து புத்தகம்  வாங்கி கொடுக்கிறேன். நல்லது எது கெட்டது என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் சிறந்த புத்தகத்தை நான் வாங்கித் தருகிறேன்.

மக்களை திசை திருப்புவதற்காக அண்ணாமலை வாய்க்கு வந்ததெல்லாம் கூறுகிறார். திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்கள் எல்லோரையும் கலைஞரின் மகன் ஒன்றிணைத்து வருகிறாரே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் சொன்னால் 100 பேரில் 10 பேராவது நம்ப மாட்டானா என்று அரசியல் செய்கிறார்.

இது போன்று விமர்சனம் மற்றும் வதந்தி பரப்புபவர்களுக்கு  பதில் அளிக்க வேண்டாம் என முதலமைச்சர் எங்களிடம் தெரிவித்துள்ளார். மக்களுக்காக பணியாற்றும் வேலையை அமைச்சர்கள் பார்க்க வேண்டும். இதுபோன்ற நபர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும் என தமிழக முழுவதும் சுற்றி வருகிறேன். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி ஆகியவற்றில் பயிலும் ஒன்றரை கோடி பிள்ளைகளுக்கு நான் தான் பொறுப்பு.  இந்த பொறுப்பை எனக்கு வழங்குவதற்கு காரணமாக இருந்தது எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்கள்தான்.” என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.