நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருநெல்வேலி நெல்லைப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் ஆனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயில் 2 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பழமை வாய்ந்த இக்கோயிலின்…

திருநெல்வேலி நெல்லைப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் ஆனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயில் 2 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பழமை வாய்ந்த இக்கோயிலின் ஆனிப் பெருந்திருவிழா கடந்த வாரம் ஜூன் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் எழுந்தருளினார். . நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி இன்னிசை, நாட்டியம், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சொற்பொழிவு ஆகியன நடைபெற்றன.

எட்டாம் திருநாளான நேற்று காலையில் சுவாமி நடராசப் பெருமான் வெள்ளை மற்றும் பச்சை சாத்தி எழுந்தருளி உள்பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவில் தேர்கடாட்சம் வீதியுலாவும், சுவாமி தங்ககைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.

இதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் சுவாமி அம்பாள் எழுந்தருளினார். காலை 8.15 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. விநாயகர், முருகன் தேரினை தொடர்ந்து, நெல்லையப்பர் தேர், அதன் பின்பு காந்திமதி அம்பாள் தேர் இழுக்கப்பட்டது. பின்னர் சண்டிகேஸ்வரர் தேர் வலம் வந்தது.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை அப்துல் வஹாப் உள்ளிட்டோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் இழுந்து சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலியின் 4 ரத வீதிகளும் விழாக்கோலம் பூண்டிருந்தது. மேலும் ஆயிரதத்திற்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.