எளிய மனிதர்களின் மறுக்கப்பட்ட நீதியின் குரலை ”அநீதி” படம் பேசும் என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வசந்தபாலன் வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அநீதி’. இந்த படத்தில் ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் வசந்தபாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
அநீதி படத்தில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், நடிகர் அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ்சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட், டி.சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நினைவாக அவருடைய கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிவி.பிரகாஷ் அப்பாடலைப் பாடியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 21-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அநீதி திரைப்படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் வசந்தபாலன் கூறியதாவது:
“அநீதி திரைப்படத்தில் முதல் முறையாக அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவர் பெரிய நடிகராக வருவார். இந்த கதையை எழுதி முடித்த போதே, இந்த கதாபாத்திரம் அர்ஜுன் தாஸ் செய்தால் சரியாக இருக்கும் என நினைத்தேன். காதல், சோகம், கண்ணீர் என பல இடங்களில் அழகாக அவர் நடித்துள்ளார். அவரது குரல் இந்த படத்தை தூக்கி நிறுத்தும்.
எளிய மனிதர்களின் மறுக்கப்பட்ட நீதியின் குரலை அநீதி படம் பேசும். நான் எனது வழக்கமாக பாணியில் இருந்து மாறுபட்டு, திரில்லர் பாணியில் இப்படத்தை எடுத்துள்ளேன். டெலிவரி பாய் கதாப்பாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். நம்முடன் வேலை பார்ப்பவர்களிடம் சாப்பிட்டாயா என கேட்பது முக்கியம். அந்த சின்ன அன்பை தான் மனிதர்கள் எதிர்பார்ப்பார்ப்பார்கள். அத்தகைய அன்பை பேசும் படமாக அநீதி இருக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.







