12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை வேகமாக பரவியதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. முன்னதாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இருப்பினும் கொரோனா பரவல் குறையாததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த
ஆலோசனையின் போது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துகள்
கேட்டு அதன் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் இணையம் வாயிலாக கருத்து கேட்கப்பட்டன. இதையடுத்து, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் “12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து மாவட்ட கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசினை நடத்த உள்ளோம்.
இதையடுத்து, மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவெடுக்கப்படும். அனைவரின் கருத்துக்களையும் முதலமைச்சர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். திடீரென 12ம் வகுப்புக்கான தேர்வை அறிவிக்க மாட்டோம். நாளைய கூட்டத்தில் தேர்வு நடத்த முடிவெடுத்தாலும் மாணவர்கள் தயாராவதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்படும். ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக உள்ளது. 7ம் தேதி முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிட்டு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளன. விரைவில் முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.







