அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழில் அதிபரான விவேக் ராமசாமி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக வல்லாதிக்க நாடுகளில் முதன்மையான நாடாக கருதப்படும் அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளிவந்திருந்தது.
இதற்காக தேர்தல் பிரசாரத்தையே டிரம்ப் தொடங்கிவிட்ட நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான தொழிலதிபர் விவேக் ராமசாமியும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து அந்நாட்டில் வெளியாகும் ‘பொலிடடிக்கோ ‘ பத்திரிக்கையில் விவேக் ராமசாமி கூறியதாக வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டிடுவது குறித்து தான் ஆராய்ந்து வருவதாகவும் .
கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப் செய்ததை வருகிற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தானும் செய்ய விரும்புவதாகவும். ட்ரம்பை போலவே அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் தொழில்முனைவராக தானும் நுழைந்து, வித்யாசமான சிந்தனைகள் மற்றும் குறைந்த எதிர்பார்ப்புகளுடன் பெரிய அளவில் ஆதரவாளர்களை திரட்ட முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய முயற்சிகள் தன்னை அதிபர் பதவியை நோக்கி அழைத்து செல்லும் எனவும் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
37 வயதாகும் விவேக் ராமசாமி அமெரிக்கவிற்கு புலம்பெயர்ந்த இந்திய தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர். இவரது பெற்றோர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். தந்தை விவேக் கணபதி அமெரிக்காவில் எலெக்ட்ரிகல் எலெக்ட்ரிகல் இன்ஜினியராகவும், தாய் கீதா ராமசாமி மருத்துவராகவும் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவின் சின்சினாட்டி பகுதியில பிறந்த இவர், ஹார்வர்ட் பல்கலையில் இளங்கலை பட்டம் முடித்து பின்னர் யேல் பல்கலையில் சட்டம் பயின்றுள்ளார். துவக்கத்தில் பயோடெக் தொழில் முனைவோராக பிரகாசித்த விவேக் ராமசாமி, அதில் பல சாதனைகள் செய்ததோடு, இவர் தயாரித்த 5 மருந்துகளுக்கு FDA எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கி அடுத்தகட்டத்திற்கு இவரை அழைத்து சென்றுள்ளது.
பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தை துவக்கி அதனையும் வெற்றிகரமாக நடத்தி வந்த இவர், அதன் மூலம் அதிகப்படியான லாபத்தை எட்டிப்பிடித்து அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக மாறி போனார். இது தவிர இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ள இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 500 மில்லியன்
டாலர்களுக்கும் (சுமார் ரூ 4,140 கோடி) அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே குடியரசு கட்சியின் மூத்த நிர்வாகியான இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயும் வேட்பாளர் போட்டியில் களம் காண இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தொழில் அதிபர் விவேக் ராமசாமியும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முனைப்புடன்
இயங்கி வரும் நிகழ்வு அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா











