உலகின் டாப் 25-ல் 2வது இடத்தை பிடித்த கடைசி விவசாயி!

உலகின் அனைத்து மொழி திரைப்படங்களையும் தரவரிசைப்படுத்தும் இணையதளமான letterboxd , 2022ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான அரையாண்டு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி கடந்த 6 மாத காலத்தில் உலகம் முழுவதும் திரையரங்கு மற்றும்…

உலகின் அனைத்து மொழி திரைப்படங்களையும் தரவரிசைப்படுத்தும் இணையதளமான letterboxd , 2022ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான அரையாண்டு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி கடந்த 6 மாத காலத்தில் உலகம் முழுவதும் திரையரங்கு மற்றும் ஒ.டி.டி. தளங்களில் வெளியான திரைப்படங்களை கணக்கில் கொண்டு ஆராய்ந்து, அதில் TOP 25 சிறந்த படங்களை தேர்வு செய்து அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் ஹாலிவுட்டின் ‘’Everything Everywhere All at Once’ எனும் காமெடி படம் முதல் இடத்தையும், தமிழில் மணிகண்டன் இயக்கி விஜய்சேதுபதி, நல்லாண்டி உள்ளிட்ட நடிகர்கள் நடித்த ‘கடைசி விவசாயி’ இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான கடைசி விவசாயி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பெரிதாக ஓடவில்லை. இப்படத்தை பார்த்த மிஷ்கின் காரில் சென்றபடியே போற்றி புகழ்ந்து வீடியோ வெளியிட்டதோடு, இயக்குநர் மணிகண்டனை நேரில் சென்று மாலை அணிவித்து முத்தம் கொடுத்து பாராட்டினார். மிஷ்கினை தொடர்ந்து பல்வேறு சினிமா பிரபலங்களுமே பாராட்டி தீர்த்த போதிலும் இப்படத்தை தயாரித்த விஜய் சேதுபதிக்கு வணிக ரீதியாக இப்படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் உலகின் புகழ்பெற்ற இணையதளம் ஒன்றின் தரவரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் வசூலில் வரலாற்று சாதனை படைத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த விக்ரம் திரைப்படம் இப்பட்டியலில் 11வது இடத்தை பெற்றுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண்-ஜூனியர் என்.டி.ஆர் நடித்த RRR படம் இப்பட்டியல் 6 இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் முறையே தமிழக அளவிலும், தேசிய அளவிலும் மகத்தான வசூல் சாதனை படைத்திருந்த நிலையில் இரண்டையும் பின்னுக்கு தள்ளி உச்சியில் நிற்கிறான் ‘கடைசி விவசாயி’!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.