அனைத்து கட்சி குழு மணிப்பூர் செல்வது தொடர்பாக எந்த முடிவையும் உள்துறை அமைச்சர் தெரிவிக்கவில்லை என திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மைதேயி இன மக்களுக்கும் நாகா மற்றும் கொக்கி இன பழங்குடியினருக்கும் இடையே இருந்து வந்த மோதல் வன்முறையாக வெடித்தது .கடந்த மே மாதம் 3 ம் தேதி தொடங்கிய இந்த கலவரம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .இந்த வன்முறையில் இதுவரை, 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பதாகவும், 350க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், டெல்லி, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு அமித்ஷா தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி. மற்றும் அதிமுக சார்பில் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்றனர். மேகாலயா மாநில முதல்வர் கான்ராட்.கே.சங்கமா-வும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு பின்னர் தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்கள் சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
” அமைதியை நிலை நாட்ட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினோம். அனைத்து கட்சி பிரநிநிகள் குழுவை மணிப்பூர் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினோம்
மணிப்பூர் விவகாரத்தில் தென்கோடியில் இருக்கும் மாநில முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்கிறார், கண்ணீர் சிந்துகிறார், ஆனால் மணிப்பூர் பிரச்சனை எவ்வளவு தீவிரம் என்பது தெரிந்திருந்தும் பிரதமர் இந்த விவகாரம் குறித்து பேசாதது வருத்தம் அளிக்கிறது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒரு உண்மை கண்டறியும் குழு ஏற்படுத்த வேண்டும் என அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அதனை பரிசீலிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்துனோம். மணிப்பூர் பிரச்சனை என்பது ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையால், நிர்வாக தோல்வியால் வந்தது, இந்த பிரச்சனையை ராணுவத்தை வைத்தோ, துணை ராணுவத்தை வைத்தோ அடக்க முடியாது என்பதை எடுத்துரைத்தோம்
மேலும் உள்துறை அமைச்சர் பேசும்போது, பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கான உணவு, அத்தியாவசிய பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதி அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, திறமையான அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர், அவர்கள் அங்கு நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்த ண்ணம் உள்ளனர் என உள்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அனைத்து கட்சி குழு மணிப்பூர் செல்வது தொடர்பாக எந்த முடிவையும் உள்துறை அமைச்சர் தெரிவிக்கவில்லை. மணிப்பூரில் சகஜ நிலை திரும்ப வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்







