விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இடம் பெற வேண்டிய திருத்தங்கள் குறித்த கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில், விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1960, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது. அந்த சட்டத்தின் படி எந்த ஒரு விலங்கை, துன்புறுத்தினாலோ அல்லது கொன்றாலோ அந்த நபருக்கு ரூ. 50 மட்டும் அபராதம் விதிக்கப்படுவதாக அச்சட்டம் கூறுகிறது.
விலங்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தண்டிக்க, நாட்டில் இருக்கும் இச்சட்டம் இலகுவாக உள்ளது என்றும் இதில் திருத்தம் கொண்டு வந்து, தண்டனையை கடுமையாக்கப்பட வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் எந்த மாதிரியான திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய வேளாண் துறை அமைச்சகம் தலைமையில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்றது. இதில், இந்திய விலங்குகள் நல வாரியம், ப்ளூ கிராஸ் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.
ஆலோசனைக் கூட்டத்தில், இந்த சட்டம் குறித்து பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை @dahd.nic.in. என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் பொதுமக்கள் உள்பட விலங்குகள் நல ஆர்வலர்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







