சிவகங்கை அருகே ஆம்புலன்ஸ் விபத்து – உதவியாளர் உயிரிழப்பு!

சிவகங்கை அருகே தனியார் ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மருத்துவ உதவியாளர் உயிரிழப்பு. ஓட்டுநர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸில் ஓட்டுநராக பணியாற்றுபவர் பெரியண்ணன் (45). அதே மருத்துவமனை ஆம்புலன்ஸின் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருபவர் மாலா.

இந்நிலையில் நேற்று அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்றனர். பின்பு அந்த நோயாளியை அங்கு சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு இன்று அதிகாலை 3 மணியளவில் மீண்டும் சிவகங்கை வழியாக தேவகோட்டை திரும்பியுள்ளனர்.

அந்த நேரம் நாட்டரசன்கோட்டை அடுத்த கண்டனிப்பட்டி அருகே வரும்போது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மருத்துவ உதவியாளர் மாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஓட்டுநர் பெரியண்ணன் மட்டும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.