அமர்நாத் யாத்திரை தொடங்கிய முதல் தற்போது வரை 24 நாட்களில் 3.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பயணம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. பனி லிங்கத்தை தரிசிக்க செல்லும் பக்தர்களின் முதல் குழுவின் பயணத்தை ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து துவங்கி வைத்தார்.
யாத்திரை தொடங்கி 24 நாட்கள் முடிந்த நிலையில், இதுவரை சுமார் 3,30,000க்கு மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, 3,000 பேர் அடங்கிய பயணிகள் குழு இன்று காலை பகவதி நகரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. அதில் 1,865 பேர் பஹல்காம் பாதையிலும், 1,160 பேர் பால்டால் வழியாகவும் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 62 நாட்கள் நடைபெறும் யாத்திரையில், சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







