நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில், ஒற்றை யானையின் பின்னங்காலில் இடது காலில் ஏற்பட்டக் காயம் காரணமாக உணவு தேடமுடியாமல் ஆற்றோரத்தில் உள்ள குப்பைகளை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் முகாமிட்டு வருகின்றன. மேலும் மலைப்பாதையில் அவ்வப்போது திடீரென யானைகள் உலா வருகின்றன. இந்த நிலையில் மலைப்பாதையில் உலா வரும் யானைகளை விரட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் நாள்தோறும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பலாபழங்களை உண்பதற்காக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து பர்லியார் பகுதிக்கு 5-க்கும் மேற்பட்ட யானைகள் மலைப்பகுதிக்கு வந்துள்ளன. இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக சுற்றி வந்த ஒற்றை யானையின் இடது பின்னங்காலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வனப்பகுதியில் உணவு தேடி செல்ல முடியாமல் ஆற்றோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உணவாக உட்கொண்டு வருகிறது.
நடக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து சிகிச்சை மேற்கொள்ள வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர். இது குறித்து குன்னூர் வன சரக அதிகாரி ரவீந்தரநாத்திடம் கேட்ட போது, இதுகுறித்து தகவல் தங்களது கவனத்திற்கு வரவில்லை எனவும், யானையை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.







