கர்நாடகாவில் தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) உடன் கூட்டணி அமைக்க அவசியமே இருக்காது என கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக தற்போது நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதில் சுமார் 1.5 லட்சம் போலீஸார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, கிட்டத்தட்ட 5 கோடியே 31 லட்சத்துக்கும் அதிகபடியான வாக்காளர்கள் வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு துவங்கிய காலை முதலே கர்நாடக மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை வாக்குகளாக ஆர்வமுடன் செலுத்தி வரும் நிலையில், பல்வேறு பிரபலங்களும் அவரவர்கள் தொகுதிகளில் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள அவர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தோடு, நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடக அமைச்சர்கள், மடாதிபதி சுவாமி சித்தகங்கா உட்பட பலர் தங்கள் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக, கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வெளியே வரும்போது ஊடகங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி தேர்தல் களத்தை சூடேற்றி வரும் நிலையில், கர்நாடகாவில் தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) உடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வியை கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பியுள்ளார்.
அப்போது பதிலளித்த அவர், ஜேடிஎஸ் உடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை எனவும், காங்கிரஸ் கட்சி 141 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டரில், மக்கள் வாக்களிக்க வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு வரத்துவங்கிய சமயத்தில், “உங்கள் வாக்கின் சக்தியை உணருங்கள்” என பதிவிட்டிருந்தவர், தனது வாக்கை பதிவு செய்த பிறகு “வலிமையான, பாதுகாப்பான கர்நாடகா வேண்டுமெனில் நான் செய்ததை போல நீங்களும் செய்ய வேண்டும்” என்று கூறி வாக்களித்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









