’குற்றச்சாட்டுகளுக்கு புள்ளி விவரங்களுடன் பதிலளிக்கப்படும்’ – அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

ஆதிதிராவிடர் நலத்துறையின் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வாரத்திற்குள்ளாக புள்ளி விவரங்களுடன் பதிலளிக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சிஐடி…

ஆதிதிராவிடர் நலத்துறையின் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வாரத்திற்குள்ளாக புள்ளி விவரங்களுடன் பதிலளிக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சிஐடி காலனி பகுதியில் பெண்களுக்கான கோலப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், “ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறது.

ஓதுக்கீடு செய்யப்பட்ட நிதியை திருப்பி அனுப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு துறையின் சார்பில் முன்னரே அறிக்கையாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஒரு வாரத்தில் புள்ளி விவரங்களுடன் பதில் அளிக்கப்படும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.