மத்திய அரசின் உத்தரவை ஏற்று புதுச்சேரியில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றும் மத்திய அரசுப் பள்ளிகளுக்கு, இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கை அமலில் உள்ளதால் அங்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“மாணவர்களின் கல்வி திறனை அதிகப்படுத்தவேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. அதனால் தான் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
மத்திய கல்வி திட்டத்தில் தான் புதுவை உள்ளது. எனவே, மத்திய கல்வி திட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் வந்தாலும் அது புதுவைக்கு பொருத்தும். எனவே, அதனை ஏற்று புதுவை மாநிலம் அதனை செய்யப்டுத்தும்.
புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டமே உள்ளது. மத்திய அரசின் உத்தரவு அதற்கும் பொருந்தும். முதலமைச்சருடன் பேசி ஆலோசனை நடத்திய பிறகு விவரமாக தெரிவிக்கப்படும்” என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.







