முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா காரணமாக ரம்ஜான் பண்டிகையின் போது பள்ளிவாசலில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பக்ரீத் திருநாளையொட்டி தொழுகைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. விருதுநகர், பாவாலி சாலையில் இருக்கும் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

சிறுவர்களுடன் பெரியவர்கள் தொழுகை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சந்தை தோப்பில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சிறபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டார். இதில் அனைவருக்கும் குர்பானி பகிர்ந்தளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் கும்பகோணம் சாந்தி நகரில் பக்ரீத் திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அங்குள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள ஈக்தா மைதானத்தில், பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நாமக்கல் பேட்டை இஸ்லாமிய ஜாமியா பள்ளி வாசல் சார்பில், பள்ளி வாசல் இமாம் சாதிக் அஷ்ரத் நடத்திய சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல் மற்றும் ஈத்கா மைதானம் என 60 இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

தமிழ்நாடு அரசின் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி புதுக்கோட்டையில் பகிரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்தக பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை பின்பற்றியும் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாநகரில் பல்வேறு பகுதிகளில், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

புதுச்சேரியில் தொழுகை

கோவையில் உள்ள பழமையான அக்தர் ஜமாத் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் பலர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். கொரோனா தடுப்பு தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒருவருக்கொருவர் வாழ்த்தினை பகிர்ந்துகொண்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ஜும்மா மஸ்ஜித், நெல்லித்தோப்பு மஸ்ஜித், காரைக்காலில் உள்ள பெரியபள்ளி வாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் விடியற்காலையிலேயே பலர் வந்து தொழுகை செய்தனர். கொரோனா தொற்று நீங்கி நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் வழிபட்டனர்.

Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம்!

Vandhana

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஜனதா தர்பார்: மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்

Vandhana

கொரோனா 2ம் அலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெறும் – வெளியுறவு அமைச்சர்

Ezhilarasan