சென்னை எழும்பூரில் அகில இந்திய எம்.சி.சி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி ஆக.24 முதல் செப்.3 வரை போட்டிகள் நடைபெறும் என்றும், பார்வையாளர்கள் கட்டணமின்றி பார்க்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (MCC) – முருகப்பா குழுமம் இணைந்து அகில இந்திய எம்.சி.சி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடத்துகின்றது. ஆகஸ்ட் 24-ஆம் தேதியான நாளை முதல் செப்டம்பர் 3 வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியாவின் முன்னனி அணிகளான தமிழ்நாடு ஹாக்கி யூனிட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஆர்மி உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
பரிசுத் தொகையாக முதலிடம் பிடிக்கும் அணிக்கு 7 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 5 லட்சமும் வழங்க உள்ளனர். மேலும் பார்வையாளர்கள் கட்டணம் இல்லை.
இந்த போட்டி குறித்த அறிவிப்பை வெளியிடும் வகையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் விஜயகுமார், கவுரவ செயலாளர் கார்த்திக், அமைப்புச் செயலாளர் போபண்ணா, முருகப்பா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அருண் முருகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் கவுரவ செயலாளர் கார்த்திக் பேசியதாவது:
94வது முறையாக இந்த போட்டி நடைபெற உள்ளது. கொரோனா காலகட்டம் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகள் தடைபட்டு இருந்த இந்த போட்டி, மீண்டும் இந்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நல்லமுறையில் மேம்படுத்தி உள்ளனர். ஆசிய கோப்பை போட்டி அண்மையில் தான் நடந்து முடிந்தது. அடுத்ததாக எங்கள் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை கண்டுகளிக்க பொதுமக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் கவுரவ செயலாளர் கார்த்திக் கூறினார்.







