நீட் விவகாரத்தில் மாநிலங்களின் நலன் சார்ந்த முக்கிய ஷரத்தை நீக்கியது பாஜக அரசு தான் என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:
சந்திரயான் விக்ரம் நிலவில் தரையிறங்குவது தங்கத்தால் பொறிக்கப்பட வேண்டிய நாள் . இந்தியாவின் விஞ்ஞானிகளுக்கு மற்றும் இஸ்ரோவுக்கு கிடைக்க கூடிய வெற்றி. இந்தியாவே எப்படி மிகப்பெரிய ஆவலோடு எதிர்பார்க்கிறதோ அதே்போல் தான் நானும் ஆவலோடு எதிர்பார்த்துக கொண்டிருக்கிறேன். நம்முடைய விஞ்ஞானிகளின் சிந்தனை, செயல்பாடு, உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது. இந்தியாவே அவர்கள் பின்னால் நின்று வாழ்த்துகிறது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித்தமிழர் என்று பட்டம் கொடுத்ததில் வியப்பு ஏதும் இல்லை. ஒரு படம் நடிக்கும் நடிகருக்கு பட்டம் கொடுக்கப்படுவது போல் ஒரு பெரிய கட்சித் தலைவருக்கு பட்டம் கொடுப்பது ஒன்றும் தவறு கிடையாது. அது அவர்களுடைய கட்சியினரின் விருப்பம் அதில் விமர்சனம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
நீட் தேர்வு காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்த போது தான் கொண்டு வந்தது என சொல்வது தவறு. 2010-ம் ஆண்டு மன்மோகன்சிங் ஆட்சியில் மாநிலங்கள் விரும்பினால் நீட தேர்வில் சேர்ந்து கொள்ளலாம், இல்லையெனில் அவர்களே தேர்வு நடத்தலாம் என்பது தான் கொண்டு வந்தனர். அதனால் அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக கூட்டணி, நீட்டை கட்டாயமாக்கியது.
நீட் தேர்வில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என விரும்பினால் தமிழ்நாடு
மாநில முதலமைச்சர் மற்றும் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் காங்கிரஸை திரும்ப திரும்ப குற்றம் சொல்ல வேண்டாம். காங்கிரஸ் கட்சி நீட்டை கொண்டு வரவில்லை, மாநிலங்கள் விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்று ஷரத்து அதில் இருந்தது. அந்த ஷரத்தை் மாற்றியது பாஜக அரசு தான்.
காவிரி பிரச்னையைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தை மூலமாக, காவிரி ஆணையத்தின் மூலமாக, நீதிமன்றத்தின் மூலமாகத்தான் தீர்வு காண முடியும். அண்ணன் தம்பிகளுக்கு இடையே வரப்பு மூலமாக பிரச்னை இருக்கிறது. ரெண்டு மாநிலத்திற்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது நமக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு பரஸ்பரத்தின் மூலமாக ஒரு ஆணையத்தின் மூலமாக கண்டிப்பாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்பி பேசினார்.







