மம்தாவை தொடர்ந்து காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்த அகிலேஷ் யாதவ்!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காங்கிரசுக்கு ஆதரவளித்ததை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க…

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காங்கிரசுக்கு ஆதரவளித்ததை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது. இதில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே நிலையில் வைத்து பார்ப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருனான மம்தா பானர்ஜி தெரிவித்து வந்தார்.

இதனிடையே கர்நாடக மாநில தேர்தலில் பெரும்பான்மையுடன் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, இதுநாள் வரை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு மறுத்து வந்த மம்தா, கடந்த மே 15-ம் தேதி ”மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ள இடங்களில் மட்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். அதே போல் மாநில கட்சிகளை மதித்து காங்கிரஸ் நடக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

இது குறித்து சமாஜ்வாடி கட்சி வெளியிட்ட அறிக்கையில், “மாநிலத்தில் எந்த கட்சி வலுவான செல்வாக்குடன் இருக்கிறதோ அக்கட்சி அங்கு போட்டியிட வேண்டும். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் இதே கருத்தை கொண்டுள்ளனர்.” என்று கூறப்பட்டுள்ளது.

கா்நாடக தோ்தலில் பாஜக தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ், ”வெறுப்புணா்வைப் பரப்பும் பாஜகவை மக்கள் நிராகரித்துள்ளனா். உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற அனைத்து தந்திரங்களையும் பாஜக கையாண்டுள்ளது. இதுபோன்ற நோ்மையற்ற செயலில் ஈடுபட்டிருக்கவில்லை என்றால் பாஜக எப்போதோ காணாமல் போயிருக்கும்.” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.