ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. இதனிடையே ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இந்த நிலையில் பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய கோரி மாணவி நந்தினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், “மாணவர்கள் சந்தித்து வரும் பிரச்சினையில் அரசியல்வாதிகள் தலையிட அனுமதிக்கக் கூடாது. நீதிபதி ஏ.கே ராஜன் குழு ஆய்வு செய்து முடிவுகளை அரசிடமே அளிக்க உள்ளது. யாருடைய உரிமைகளும் இதில் பாதிக்கப்படப் போவதில்லை. ஆகவே, அரசியல் உள்நோக்கத்தோடு தொடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை வரும் 5ஆம் தேதி விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வில்சன் முறையீடு செய்தார். கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, 5ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளது.







