அஜித்குமாரின் தாயார் மறைவு – பாமக தலைவர் அன்புமணி இரங்கல்!

அஜித்குமார் தாயார் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அன்பை நான் அறிவேன். உலகில் எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது தாயாரின் மறைவு தான்.

அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.