நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




