தொடர் விடுமுறை காரணமாக விமான டிக்கெட் விலை மும்மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் விடுமுறை வந்தால் உடனே அனைவருக்கும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாவது இயல்பு. அதிலும் வார இறுதி நாட்களுடன் சேர்ந்தவாறு விடுமுறை நாள் வந்தால் சொல்லவே வேண்டாம். யாரும் தவறவிடாது சொந்த ஊர் செல்வர். குறிப்பாக சென்னையில் பணிபுரியும் வெளி மாவட்டத்தினர் அனைவரும் ஊர்திரும்பி தங்கள் சொந்தங்களுடன் நாட்களை கழிக்கவே விடும்புவர். இதனால் ரயில், பேருந்து மட்டுமல்லாது விமான டிக்கெட்டுகளுக்கும் கடும் போட்டி நிலவும்.
இந்த போட்டியை பயன்படுத்தி டிக்கெட் விலையை உயர்த்துவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீதும், விமான நிறுவனங்கள் மீதும் குற்றச்சாட்டு எழுவது தொடர்கதையாகி வருகிறது.
இதன் தொடச்சியாக தற்போதும், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் விமானங்களின் டிக்கெட்டுகள் கடுமையாக உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சுதந்திர தினம் வருகின்ற செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை உள்ளதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்புப் பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், விமானங்களில் செல்வோர் டிக்கெட் விலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு வழக்கமாக ரூ.3,000-க்கு விமான டிக்கெட் விற்பனை செய்யப்படும். ஆனால், தொடர் விடுமுறையை பயன்படுத்தி திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட விமானங்களில் செல்வதற்கான டிக்கெட் ரூ. 10,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விமான பயணிகள் டிக்கெட் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்.







