போகி பண்டிகையின் எதிரொலியால் சென்னையில் வளசரவாக்கம் மண்டலத்தில் காற்றின் தரம் மிக மோசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
போகி பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிக்கும் பழக்கத்தை மக்கள்
கொண்டுள்ளனர். இதில், இயற்கைக்கு ஓவ்வாத பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் ஆன
துணிகள், டயர்கள் உள்ளிட்டவற்றை எரிப்பதால், உடல் நலன் சார்ந்து பல
பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உலகம் முழுவதும் காற்று மாசு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்
தமிழ்நாட்டில், புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு அரசு
வலியுறுத்தியது.

இந்நிலையில், போகி பண்டிகையின் போது டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை
மக்கள் எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு பாதிப்பை தமிழ்நாடு மாசு
கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்தது.
குறிப்பாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தனித்தனியாக இந்த கண்காணிப்பு
செய்யப்பட்டது. இதில், சென்னையின் 14 மண்டலங்களில் நிர்ணயிக்கப்பட்ட
அளவுக்குள் மாசு இருந்ததாகவும் வளசரவாக்கம் மண்டலத்தில் மட்டும்
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

வளசரவாக்கம் மன்றத்தில் காற்றின் தர குறியீடு 135 முதல் 277 வரை இருந்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆம் தேதி காலை 8 மணி முதல் 14 ஆம் தேதி காலை 8 மணி வரை சென்னையில் ஒட்டுமொத்தமாக காற்று தரத்தை அளவீடு செய்ததில், கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவான 80 மைக்ரோ கிராம் கன மீட்டருக்கு உட்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காற்றில் கலந்த PM 2.5 நுண்துகள்கள் அளவு 50 மைக்ரோ கிராம் கன மீட்டர்
முதல் 113 மைக்ரோ கிராம் கன மீட்டர் வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நுண்துகளான PM 10, 148 மைக்ரோ கிராம் கன மீட்டர் முதல் 203 மைக்ரோ
கிராம் கன மீட்டர் வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .







