சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் மின்னணு வர்த்தக நிறுவனங்களின் விநியோக வாகனங்களால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காற்று மாசில் அமேசான், பிளிப் கார்ட் உள்பட 6 பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 66 சதவீதம் என்கிறது அந்த ஆய்வு முடிவு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியா, ஐரோப்பா, வடக்கு அமெரிக்காவில் உள்ள 90 வர்த்தக விநியோக நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மின்னணு வர்த்தகத் துறையில் உள்ள சங்கிலி தொடர்புகளில், வாடிக்கையாளர்களிடம் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணிகளில் விநியோக வாகனங்கள் ஈடுபடுகின்றன.
2030 இல் இந்தியாவில் மின்னணு வர்த்த சந்தை மதிப்பு 350 பில்லியன் டாலரை எட்டும் என்று கணக்கிடப்பட்ட நிலையில், சுற்றுச்சூழலில் இந்த வாகனங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வுக்குட்படுத்தவது அவசியமாகிறது.
ஸ்டாண்ட் எர்த் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளுக்கு கிளீன் மொபிலிட்டி கலெக்டிவ் என்ற அமைப்பு சான்றளித்துள்ளது.
UPS, FedEx, Amazon, DTDC, Flipkart, DHL போன்ற முக்கிய முன்னணி நிறுவனங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், இந்த 6 நிறுவனங்களுக்காக இயக்கப்படும் விநியோக வாகனங்களின் கார்பன் உமிழ்வு மட்டும் 4.5 மெகா டன் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது 10 லட்சம் பெட்ரோல் வாகனங்கள் ஓராண்டுக்கு வெளியிடும் கார்பன் உமிழ்வுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார்பன் உமிழ்வை குறைக்கவும், பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை எட்டவும், அந்த நிறுவனங்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் முக்கியப் பங்கு வகித்த ஸ்டாண்ட் எர்த் ரிசர்ச் குரூப் அமைப்பின் முக்கிய ஆய்வாளரான கிரேக் ஹிக்ஸ் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் விநியோக வாகனங்களின் கார்பன் உமிழ்வு குறித்து பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார். குறிப்பாக, விநியோக வாகனங்கள் மொத்த கார்பன் உமிழ்வில் 6 பெரு நிறுவனங்களின் பங்களிப்பு என்பது 66 சதவீதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் வளர்ச்சி அடைந்த நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட், 2030 இல் தன்னுடைய வினியோக வாகனங்களை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்றுவது என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது மின் வாகனங்களின் பயன்பாட்டை நோக்கிய இந்திய அரசின் பயணத்திற்கு மிகச் சிறந்த தொடக்கமாகவும் அமையும். மேலும், நிதி ஆயோக்கின் ஷுன்யா பிரசாரத்தின் நோக்கமான விநியோக துறை மின்னணு வாகனங்களின் பயன்பாட்டை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விநியோக வாகனங்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வை முற்றிலும் குறைப்பதற்கான கொள்களைகளையும் வகுக்கத் தொடங்கியுள்ளது.
மின்னணு வர்த்தகத்திற்காக தினசரி இயக்கப்படும் லட்சக்கணக்கான வாகனங்கள், காற்று மாசை அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழலையும் மக்களின் உடல்நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கிளீன் மொபிலிட்டி கலெக்டிவின் சித்தார்த் ஸ்ரீநிவாஸ் தெரிவிக்கிறார்.