நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா காரணமாக உயிரிழந்ததாக வந்த தகவலை, எய்ம்ஸ் மருத்துவமனை மறுத்துள்ளது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு உட்பட பல்வேறு வழக்கில் தொடர்புடையவர் சோட்டா ராஜன். மும்பை செம்பூர் திலக் நகர் பகுதியில் வசித்து வந்த சோட்டா ராஜன், நிழல் உலக தாதா, தாவூத் இப்ராகிமுடன் இணைந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வந்தவர். எண்பதுகளில் அருண் காவ்லி, தாவூத் கோஷ்டிகளின் மோதல் அதிகரித்ததை அடுத்து 1989 ஆம் ஆண்டு சோட்டா ராஜன் துபாய்க்குத் தப்பினார்.
அங்கு தாவூத்தின் வலதுகரமாக செயல்பட்ட சோட்டா ராஜனுக்கும் தாவூத்துக்குமே மோதல் ஏற்பட்டதை அடுத்து, 1993 ஆம் ஆண்டு, தனி தாதாவாக களமிறங்கி, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். கூடவே தாவூத் இப்ராகிமின் டி கம்பெனியுடன் அடிக்கடி மோதி வந்தார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த சோட்டா ராஜனை, தாவூத் கூட்டாளிகள் தாய்லாந்தில் கொல்வதற்கு முயற்சி செய்த சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
சோட்டா ராஜன் மீது கொலை, ஆள் கடத்தல் உட்பட சுமார் 70 வழக்குகள் உள்ள நிலையில், போலீசாரால் அவரை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவில் அவர் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.
போலி பாஸ்போர்ட் வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளரை கொன்ற வழக்கிலும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. இந்நிலையில் அவருக்கு கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சோட்டா ராஜன்
உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை எய்ம்ஸ் மருத்துவ மனை நிர்வாகமும் டெல்லி போலீசாரும் மறுத்துள்ளனர்.







