உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற புதிய சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பக்கம் அதிகபடியான நிர்வாகிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தொண்டர்கள் தன்பக்கம் உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் கூறிவருகிறார். இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில், உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற புதிய சிக்கல் எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
அண்மைச் செய்தி: ‘‘இருக்கையில் அமரக்கூடாது என்று யாரும் கூறவில்லை’ – சிவகங்கை மாவட்ட ஆட்சியர்’
இதில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்குக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் கையெழுத்துப் போட வேண்டும். ஆனால், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில் இந்த படிவங்களில் யார் கையெழுத்து இடுவார்கள் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வரும் 30ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்தைப் பெற்று வேட்புமனுக்களை சமர்ப்பிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்களை சுயேச்சைகளாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








