அடுத்த 15 நாட்களில் முட்டை விலை ரூ.6ஐ கடக்கும்

முட்டை விலை அடுத்த 15 நாட்களில் ரூ.6ஐ கடக்கும் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் கே.சிங்கராஜ் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு முட்டையின் விலை ரூ.5.50 ஆக உயர்ந்தது.…

முட்டை விலை அடுத்த 15 நாட்களில் ரூ.6ஐ கடக்கும் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் கே.சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு முட்டையின் விலை ரூ.5.50 ஆக உயர்ந்தது. இதுவரை கடைகளில் இந்த அளவுக்கு முட்டை விலை உயர்ந்தது இல்லை என சமானிய மக்கள் வேதனை தெரிவித்தனர். சேலத்தில் சில்லறை வியாபாரம் செய்யும் கடைகளில் முட்டை விலை ரூ.6ஐ எட்டியது. இதுகுறித்து அஸ்தம்பட்டி வியாபாரி ஒருவர் கூறுகையில், முட்டை விலை வரும் நாட்களில் உயரலாம் என மொத்த வியாரிகள் கூறியதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் கே.சிங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாமக்கல்லில் 1,100 கோழிப்பண்ணைகளில் தினசரி 4.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 1.25 கோடி முட்டைகள் கேரளாவுக்கும், 45 லட்சம் முட்டைகள் சத்துணவு திட்டத்திற்கும், 40 லட்சம் முட்டைகள் பெங்களூருவுக்கும், மீதமுள்ளவைகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த வருடம் 5 முதல் 6 கோடி முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த வருடம் ஒரு கிலோ கோழித்தீவனம் ரூ.16 விற்பனையானது. கொரோனா பரவலுக்கு பிறகு ஒரு கிலோ கோழித்தீவனம் ரூ.28க்கு விற்பனையாகிறது. இதுமட்டுமல்லாமல் தொழிலாளர்கள் கூலி, எரிபொருள் விலை மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதாக கூறினார்.

மேலும், விலை உயர்வு காரணமாக நாடுமுழுவதும் கறிக்கோழியின் விலை 40 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு ரூ.4.80 முதல் ரூ.5 வரை செலவழிக்கிறோம். முட்டையின் விலை ரூ.5க்கு மேல் வைத்தால் மட்டுமே எங்களால் தொழில் செய்ய முடியும். கோடைகாலத்திற்கு பிறகு நுகர்வு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. விலை உயர்வு காரணமாக நுகர்வில் எந்தவொரு குறைவும் செய்யப்படவில்லை. எனவே அடுத்து வரும் 15 நாட்களில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.6ஐ தொடும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.