ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திட்டுதான் தீர்மானம் நிறைவேற்ற முடியும்: வைத்திலிங்கம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை, மூத்த நிர்வாகி தம்பிதுரை சந்தித்தது ஏன் என்பது தொடர்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை, மூத்த நிர்வாகி தம்பிதுரை சந்தித்தது ஏன் என்பது தொடர்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாகவே தெரிவித்த கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. இந்த நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை தம்பிதுரை சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்  பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “தம்பிதுரை ஓபிஎஸை சந்தித்தார். கட்சி வலுவாக இருக்கவும் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவும் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஒற்றைத் தலைமை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனை சுமூகமாக கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.  தம்பிதுரையிடம் ஓ.பன்னீர்செல்வம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவதாக தம்பிதுரை சொல்லியுள்ளார்” என்று குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமியை நீங்கள் சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக சந்திப்பேன். பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டுதான் எந்த தீர்மானமும் நிறைவேற்ற முடியும். தனியாக எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்ற முடியாது. அப்படி கொண்டு வந்தாலும் அது செல்லாது. தனியாக தீர்மானம் கொண்டுவந்தால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.