அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி ரயில்வே ஜங்சனில் 30க்கும் அதிகமான பட்டதாரி இளைஞர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணுவத்தில் இளைஞர்களை அதிகம் சேர்ப்பதற்கான முயற்சியாக அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்பட நாட்டின் பல பகுதிகளில் இந்த திட்டத்திற்கு எதிராக ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தின் கீழ் பணிக்குச் சேர வயது உச்சவரம்பு 21 என்பதால் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி ரயில்வே ஜங்சன் வளாகத்தில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து 30க்கும் அதிகமான பட்டதாரி இளைஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய அரசு இளைஞர்களின் கனவை சீரழிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதாகவும் நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் 4வது நடைமேடை அருகே தண்டவாளத்தில் அமர்ந்தபடி முழக்கமிட்டனர்.
இதனையடுத்து ரயில்வே போலீசார் இளைஞர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை பின் வாங்காத காரணத்தினால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். எது எப்படி இருந்தாலும் மத்திய அரசு இந்த திட்டத்தை உடனடியாக கைவிடாவிடாவிட்டால் தங்களைப் போன்ற இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இளைஞர்கள் தெரிவித்தனர்.