“கூட்டணியில் தேமுதிக நீடிப்பதாக கூறுவதற்கு அதிமுகதான் பதில் அளிக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிப்பதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டதற்கு அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“இன்று திமுக செயற்குழு பொதுக்கூட்டத்தில், விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. நாங்கள் என்றைக்கும் இதனை மறக்கமாட்டோம். ராஜ்யசபா சீட் 2026இல் கொடுக்கப்படும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதே 5 எம்பி சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டது. பேச்சு வாயிலாக மட்டுமல்லமால் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர்.

ஏற்கனவே அன்புமணி, ஜி.கே. வாசனுக்கு அதிமுக தரப்பில் ராஜ்ய சபா சீட் தரப்பட்டுள்ளது. இந்த முறை தேமுதிகவுக்கு என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. அன்றே கடிதம் வாயிலாக கையெழுத்து போட்டு கொடுத்தார்கள் அறிவிப்பது அவர்களின் கடமை என்று கூறினோம். இன்று அவர்களின் கடமையை ஆற்றி உள்ளனர்.

அரசியல் என்பது தேர்தலை ஒட்டியதுதான். 2026 தேர்தலை ஒட்டிதான் ராஜ்ய சபா சீட் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கடமையை ஆற்றி உள்ளனர். தேர்தலை ஒட்டி எங்களின் கடமையையும் ஆற்றுவோம். 2024 தேர்தலின் போதே எழுதி தரப்பட்டதும் உண்மைதான். எழுத்துப்பூர்வமாக கொடுத்ததில் வருடம் குறிப்பிடவில்லை. வருடம் ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டதற்கு வழக்கமாக வருடம் குறிப்பிட மாட்டோம் என்று, ஆனால் உறுதியாக சீட் தருகிறோம் என்று சொன்னார்கள்.

ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்த நிலைபாட்டை முடிவு செய்வோம். அடுத்த 6 மாதம் தேர்தலை நோக்கி எங்கள் பயணம் இருக்கும். அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிப்பதாக அவர்கள் கூறியது குறித்து அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். தேர்தலையொட்டியை அதிமுக ராஜ்யசபா சீட்டை ஒதுக்கி உள்ளது. அவர்களின் முடிவை அறிவித்துள்ளார்கள். அதேபோல எங்களின் நகர்வும் தேர்தலை ஒட்டித்தான் தான் இருக்கும்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.